கேரளாவில் மருத்துவமனையிலிருந்து தப்பியோடி பின்னர் மீட்டுக் கொண்டுவரப்பட்ட இளைஞர் கொரோனா வார்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அனடு பகுதியை சேர்ந்தவர் உன்னி. இவர் மே 28 அன்று நண்பர்களுடன் மது அருந்தி விட்டு திடீரென மயங்கி விழுந்து விட்டார். பின்னர் அவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு நோய் தோற்று கடுமையான நிலையில் இருந்துள்ளது.
மேலும், இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் இவர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இவருக்கு ஜூன் 7ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது. இரண்டாவது முறையும் பரிசோதனை செய்யும்போது நெகட்டிவ் என வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்ற நிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று தப்பி ஓடி விட்டார் உன்னி.
பின்னர் பேருந்து மற்றும் ஆட்டோவில் தனது ஊரான அனடுவிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே நெடுமங்காடு உணவகத்தில் உணவு உண்டுள்ளார். இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் உதவியோடு சுகாதார ஊழியர்கள் நீண்ட முயற்சிக்கு பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு கொரோனா வார்டிலேயே தூக்கிட்டுக் கொண்டுள்ளார். பின்னர் அவரை அவசர பிரிவுக்கு எடுத்துச் செல்லும்போது வழியிலேயே உயிர் பிரிந்தது.