கொரோனாவின் அடுத்த குறி இறைச்சி கடையா? மக்கள் உஷார் ஆவார்களா...?

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கொரோனாவின் அடுத்த குறி மீன், இறைச்சி கடைகளாக இருக்கலாம் மக்கள் உஷார் ஆவார்களா...?



ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் விருதுநகரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பெட்டிக் கடை முதல் பெரிய கடைகள் வரை திறக்கப்பட்டுள்ளன. கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று பொருட்கள் வாங்க வேண்டும் என வியாபாரிகள் அறிவுறுத்தினாலும் அதையும் அலட்சியம் செய்பவர்களையும் காண முடிகிறது.


சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வந்தால் போதும், மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதன்படி விருதுநகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி, மீன் கடைகளிலும் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சிகளைக் காண முடிந்தது. இறைச்சி வாங்குகிறார்களோ இல்லையோ, கொரோனாவை வாங்கிவிட்டு சென்று விடுவார்களோ என்ற அச்சம், அந்த கடைகளை கடந்து செல்லும் அனைவருக்கும் இருக்கிறது. இதே நிலைதான் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரங்களிலும் நிலவுகிறது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.