பாதாள சாக்கடை பணியில் மண் சரிந்து கூலித் தொழிலாளி பலி!!


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சியின் சார்பில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு கடந்த 2016 பிப்ரவரி 29-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது.பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு அரசு ரூபாய் 112 கோடியே 53 லட்சம் ஒதுக்கியுள்ளது.


நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் பணிகள் இன்னும் முடிவடையாமல் இழுபறி நிலையிலேயே உள்ளது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் குழியில் விழுந்து பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில் கீழ ஊரணி பகுதியில் நடந்த பாதாளச் சாக்கடை பணியில் 21 அடி ஆழத்தில் தோண்டப்பட்டுள்ள குழியில் பைப் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்பொழுது பக்கவாட்டுச் சுவர் பெயர்ந்து மேல் இருந்து மண் சரிந்ததில் காங்கேயத்தை சேர்ந்த ராஜா (40) என்ற கூலி தொழிலாளி மண்ணில் புதைந்தார். அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  ஈடுபட்டு ராஜாவை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.


பின்னர் அவரது உடல், உடல் கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் உயிர் பலியாகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.