புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது!!.

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் அனைத்து கடைகளும் 2 மணியுடன் மூடப்படுகிறது. கடற்கரை சாலையும் மூடப்படுகிறது.



புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றால் நோயாளிகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் புதுச்சேரி முதலவர் நாராயணசாமி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார். முதல்கட்டமாக காய்கறி அங்காடி மூடப்பட்டு பேருந்து நிலையத்திற்கு நேற்று மாற்றப்பட்டது. 



அடுத்ததாக இன்று முதல் பத்து நாட்களுக்கு கடற்கரை சாலையில் நடைபயிற்சி தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் மார்ச் 19ம் தேதி முதல் 75 நாட்களுக்கு மூடப்பட்ட கடற்கரை சாலையில் மக்கள் நடை பயிற்சிக்காக கடந்த 6ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் இங்கு மக்கள்  சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது.


இதே போல்  கடைவீதிகளில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் அதிகளவு நடமாடுவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் இன்று காலை முதல் அனைத்து கடைகளும் காலை  6:00 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் காலை 10  மணி முதல் 2 மணி வரை மட்டுமே விற்பனை செய்யவேண்டும், பால் பூத்துக்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதி, மருந்து கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


உணவகங்களில் காலை 6 மணி முதல் 2 மணி வரை அமர்ந்து உண்ணவும், இரவு 8 மணி வரை பார்சலுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக் கவசம் அணியாமல் வந்தால் 100 ரூபாய் என்ற அபராதத்தை 200 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் இந்த அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.