விசாரணைக் கைதிகள் மரணம் போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். உரிய நீதி வழங்கப்படும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸாரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் வழக்கில் முதற்கட்டமாக அரசு தரப்பில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல காவல்துறைத் தலைவர் தரப்பிலிருந்து இந்த வழக்கு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தைக் கேட்டறிந்தனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை செய்த நீதிபதிகள் இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அதற்காக அரசு காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய வழிவகைகளை பிறப்பிக்க வேண்டும் என்ற கருத்து தெரிவித்தனர். கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை மற்றும் உடற்கூறு ஆய்வு தொடர்பான அறிக்கையை அதற்கான வீடியோ பதிவுடன் சீலிட்டக் கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதேபோல இந்த வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உடற்கூறு ஆய்வு செய்த பின்பு உடலை அடக்கம் செய்வதற்கான முறையில் கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தும். அதில் எவ்வித தளர்வும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிப்பதால் எதிர் தரப்பிலிருந்து எந்தவிதமான கருத்துக்கள் வைக்கப்படவில்லை.