கொரோனா வைரஸ் தொற்று சில தளர்வுகளுக்கு பின் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஃப்ளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அண்மையில் தென் மாகாணங்களில் தளர்த்தப்பட்டன. வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு மீண்டும் வேகமாக கொரோனா பரவ தொடங்கியது.
கடந்த சனிக்கிழமை மட்டும் ஃப்ளோரிடா மாகாணத்தில் கொரோனாவால் 9500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பதிவாகியது. வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 9000 ஆக இருந்தது.
இதனை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1.25 லட்சம் பேர் பலி
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 125,000 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இது தொடர்பான பேசிய மருத்துவர் ஃபெளசி, “சில பகுதிகளில் முன்னதாகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுதான் இப்போது அதிகரித்திருக்கும் கொரோனா தொற்றுக்குக் காரணம். மக்கள் நெறிமுறைகளை பின் பற்றுவது இல்லை. இதுவே பிறருக்கு கொரோனா பரவ காரணமாக உள்ளது,” என கூறினார்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் முகமாக மருத்துவர் ஃபெளசி இருக்கிறார்.