கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டில் உள்ள காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த மார்க்கெட் மற்றும் மார்க்கெட் அருகே உள்ள வாகனம் நிறுத்தத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அந்த நபர் வசிக்கும் பகுதி முழுவதுமே கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க சில புதிய நிபந்தனைகளை வகுத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 3 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று எம்.ஜி.ஆர். மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டியுள்ள வாகனம் நிறுத்தத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணத்தால் சென்னையில் கோரோனா தொற்று அதிவேகமாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.