அங்கீகாரம் கிடைக்காததால் கண்டுபிடிப்புகளை தீயிட்டுக் கொளுத்திய மயிலாடுதுறை இளம் விஞ்ஞானி!!!!....
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடந்த 2009ஆம் ஆண்டு ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை முரளி என்பவர் துவக்கினார். இவரது கண்டுபிடிப்புகளை பார்த்து வியந்த நாகை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை இவருக்கு வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இதனடிப்படையில் பன்முக அதிவேக சைக்கிள், பயோகேஸ் வாகனம், ராணுவ வீரர்களுக்கான ஹாட் & கூல் உடை, தண்ணீரில் இயங்கும் இரு சக்கர வாகனம், கொரோனா சிகிச்சைக்கான மலிவுவிலை வென்டிலேட்டர் போன்ற 2300க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார்.
இதுவரை இவரது கண்டுபிடிப்புகளுக்காக 128 விருதுகள் மற்றும் தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
எனினும் இவரது கண்டுபிடிப்புகள் 10 ஆண்டுகளாக போராடியும் பயன்பாட்டுக்கு வர அரசு எவ்வித உதவியும் செய்யாததால் விரக்தியடைந்த நிலையில் தற்போது அவர் பெற்ற 128 விருதுகள், தங்கப்பதக்கங்கள் மற்றும் 2300க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் ஆவணங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார்.
இது குறித்து முரளி கூறியபோது, எனது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும்படி 10 ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடங்கிய இடத்திலேயே எனது கண்டுபிடிப்புகள் நிற்கிறது. என்னுடைய கண்டுபிடிப்புகளை நாமே பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என்று நினைத்து தனியார் வங்கியிடம் கடன் கேட்ட போது அவர்களும் கடன் கொடுக்க மறுக்கின்றனர் என வருத்தத்துடன் கூறினார்.