ஆயுதங்களுடன் சுற்றிய ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை..

ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் அதிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த M4 ரக  துப்பாக்கியும் இரண்டு குண்டுகளும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. இது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட மற்றொரு முயற்சி என போலீசார் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, 8 அடி அகலம் கொண்ட இந்த ட்ரோன் கத்துவா பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை அருகே பாகிஸ்தானின் பனேசர் பகுதியிலிருந்து இயக்கப்பட்டிருக்கிறது. இன்று அதிகாலை 5 மணியளவில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ட்ரோன் வானத்தில் சுற்றிக்கொண்டிருந்தது அவர்கள் கண்ணில் பட்டு உள்ளது. இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் பறந்து கொண்டிருந்த அந்த ட்ரோன் பாதுகாப்பு படை வீரர்கள் 9 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தி வீழ்த்தினர் என தெரிவித்துள்ளார்.



மேலும், அவர் பாகிஸ்தான் ஏஜென்சிகளின் இந்த செயல்கள் காஷ்மீரில் தீவிரமாகச் செயல்படும் ஜெய்ஷ்-இ பயங்கரவாதிகளைப் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும் அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் ஆயுதம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பாகிஸ்தானின் எல்லையில் உள்ள மற்ற பகுதிகளிலும் குறிப்பாக குப்வாரா, ராஜோரி மற்றும் ஜம்மு பகுதியிலும் இதே போன்று ஆயுதங்களைக் கடத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.