மீண்டும் டாஸ்மாக் கடையா ? - மதுரையில் பெண்கள் போராட்டம்

மதுரையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல்.



மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் ஏற்கனவே 4 மதுபான கடைகள் உள்ளது.இங்கு மதுவை குடித்து விட்டு பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு டாஸ்மாக் கடை இன்று திறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.     


இத்தகவலை அறிந்த அப்பகுதி  பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் கடை முன்பாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி பெண்கள் மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதனைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள்,  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இவர்களிடையே மேலும் வாக்குவாதம்  நீடித்தது. 


முடிவில் இப்பகுதியில் நிரந்தரமாக இந்த டாஸ்மாக் கடை செயல்படாது என்று வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல் துறையும் அறிவித்த பிறகு அப்பகுதி பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.