ஜெயலலிதா மரணம்!! ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



2016 டிசம்பர் 5ம் தேதி காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கால அவகாசம் கோரியதால் அவ்வப்போது கால அவகாசத்தை நீட்டித்தது தமிழக அரசு.



இதனிடையே சசிகலா உள்ளிட்ட 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இதற்கிடையில் 21 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது.


இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 7வது முறையாக கடந்த 2019 பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 2020 ஜூன் 24 ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜூன் 24ஆம் தேதி முடிய உள்ள நிலையில், மேலும் நான்கு மாதங்களுக்கு கால அவகாசம் கோரி 8வது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.


இதனையடுத்து, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே 7 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், 8வது முறையாக கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.