சர்வதேச யோகா தினம்!!!..


நெல்லிக்காய்கள் மீது அமர்ந்து யோகாசனம் செய்து திருச்சியில் இரு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 7ஆம் வகுப்பு மாணவி சுகிதா என்பவர் நெல்லிக்காய்கள் மீது அமர்ந்தபடி 21 நிமிடம் தொடர்ச்சியாக கண்களை மூடி பத்மாசனத்தில் அமர்ந்து சாதனை நிகழ்த்தினார். இதேபோல், 6ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா தேவி, நெல்லிக்காய்கள் மீது அமர்ந்தபடி பத்மாசனம், சிவலிங்காசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டினார். 


சர்வதேச யோகா தினத்தையொட்டி, அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, திரிகோண ஆசனம், உட்கட்டாசனம் உள்ளிட்ட 16 வகையான ஆசனங்களை அவர்கள் செய்தனர். 


மேலும், நெல்லையில் காணொலி காட்சி மூலம் உலக யோகா தின நிகழ்வுகள் நடைபெற்றன. நெல்லை அறிவியல் மையத்தில் உள்ள அரங்கில் 6 பேர் இணைந்து யோகாசனங்களை செய்தனர். அதனை, பேஸ்புக், டிவிட்டர், யூ டியூப் மூலம் ஒளிபரப்பி, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே ஆசனங்களை செய்ய வழி வகை செய்யப்பட்டிருந்தது.