சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு. காவல் உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..

தூத்துக்குடியில்  போலீசார் தாக்கியதில் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன்னிலையில் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை ரிமாண்ட் செய்தனர்.



இந்நிலையில் சிறையில் பென்னிக்சுக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, சிறைக் காவலர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் இன்று காலை மரணம் அடைந்தார்.



இந்நிலையில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இருவரது உடல் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதனையடுத்து, இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட இரு காவல் உதவி ஆய்வாளர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம்.செய்யப்பட்டுள்ளனர்.