ஓசூரில் விளையாட்டு வினையானது:


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது 22). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் வெற்றிவேல், தனது நண்பர்கள் 2 பேருடன் ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அவர், செல்போனில் ‘டிக்-டாக்’ வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கினார். அப்போது வெற்றிவேல் விழுங்கிய மீன் எதிர்பாராதவிதமாக அவரது சுவாசக்குழாயில் சிக்கியது.இதனால் மூச்சுத்திணறிய அவரை நண்பர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வெற்றிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மீன் வெளியே எடுக்கப்பட்டது.