கொரோனா பரவல் காரணமாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எச்-1பி உள்ளிட்ட வேலைவாய்ப்பு விசாக்களை இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்கா மிக மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரையில் 23,88,153 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,22,610 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதன்படி கொரோனாவால் வேலையிழந்து தவிக்கும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு விசாக்களான எச்-1பி, எச்-4 உள்ளிட்ட விசாக்கள் வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் எச்-1பி மற்றும் எச்-4 விசாக்கள் வழங்குவதற்கு இந்த ஆண்டு இறுதி வரை தடைவிதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் இனி புதிதாக அமெரிக்காவில் நுழைபவர்கள் கீரீன் கார்டு பெற முடியாது என கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த புதிய கட்டுப்பாடுகள் மருத்துவ ஊழியர்களுக்கு, குறிப்பாக கொரோனா பராமரிப்பு அல்லது ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதாவது ஜே மற்றும் எல் விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் இந்த இடைநீக்க உத்தரவு ஏற்கனவே அமெரிக்காவில் விசாக்களில் இருப்பவர்களை பாதிக்காது.
இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயனளிக்கும் எச் -1 பி மற்றும் எல் 1 உள்ளிட்ட வெளிநாட்டு வேலை விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அமெரிக்காவில் 5,25,000 வேலைகளை அமெரிக்கர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமெரிக்கர்களுக்கு நன்மை அளித்தாலும் இந்தியர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே எச்-1பி விசாக்களில் ஏராளமான இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.