கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் என்பவருக்கும் அவருடன் பணிபுரிந்த சக்தி தமிழினி என்பவருக்கும் கடந்த 5ம்தேதி சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சக்தி தமிழினியின் பெற்றோர் கடந்த 19ம் தேதி கார்த்திகேயன் மற்றும் அவரது தாயை தாக்கிவிட்டு சத்தி தமிழினியை கடத்திச் சென்றுவிட்டனர்.
தன் மனைவியை மீட்டுத் தரக்கோரி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார் கார்த்திகேயன்.
அம்மனுவில் சக்தி தமிழினியின் தந்தை அடியார்களைக் கொண்டு தன்னையும் தன் தாயையும் தாக்கிவிட்டு தன் மனைவியை கடத்திக் கொண்டு சென்று விட்டதாகவும் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
மேலும் தனியறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மனைவியின் உயிருக்கு ஆபத்து எனவும் அவரை மீட்டுத் தர காவல்துறைக்கு ஆணையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.