சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகள் உயிரிழந்ததைக் கண்டித்து தூத்துக்குடியில் இன்று 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கடந்த 19ம் தேதி ஊரடங்கு மீறியதாக கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளம் காவலர்களால் கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் இருந்து வந்த நிலையில் உள்ளது.
சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் பேரவை சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே மாவட்டம் முழுவதும் 80% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், சாத்தான்குளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இது போன்ற செயல்கள் தொடராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.