3 தினங்களில் 3 யானைகள் கொலை!!!......

ட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 3 தினங்களில் கர்ப்பிணி யானை உட்பட 3 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



   சமீப காலமாக வனப்பகுதியில் உயிரினங்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் கேரளாவில் உணவுத்தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு, சமூக விரோதிகள் சிலர் அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வனப்பகுதியில் விலங்குகளில் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. 


     இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 3 தினங்களில் 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் கர்ப்பிணி யானை ஒன்று உயிரிழந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் பிரேத பரிசோதனையில் யானையின் கல்லீரலில் நீர்க்கட்டிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 


     இதனை தொடர்ந்து, முதல் யானை உயிரிழந்த 300 மீட்டர் தொலைவில் உள்ள பிரதாப்பூர் வனப்பகுதியில் நேற்று மற்றொரு பெண் யானையின் சடலம் கண்டுபிடிக்கபட்டது, ஆனால் அந்த யானையின் உடலை அதன் மந்தைகள் பாதுகாத்து வந்ததால் இன்று காலை வரை மீட்டெடுக்க முடியவில்லை, தற்போது அதன் உடலை மீட்டுள்ள அதிகாரிகள் பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 


  இதேபோல் பால்ராம்பூர் மாவட்டத்தில் கோபால்பூர் வனப்பகுதியில் மூன்றாவதாக உயிரிழந்த நிலையில் யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர் இரண்டாவது யானை விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் மூன்றாவது யானை இறப்பு தொடர்பாக பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே கூறமுடியும் என தெரிவித்துள்ளனர்.