வியாசர்பாடியில் 2வது கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று திறந்து வைத்தார். தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், வென்டிலேட்டர் உதவி தேவைப்படாத கொரோனா தொற்று நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மூன்று முறை பரிசோதனை மேற்கொளளப்படும். முதல் நாள், 7வது, 14வது நாள் என அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ள நோயாளிகள் அனைவருக்கும் உணவு மற்றும் சிகிச்சை அனைத்தும் இலவசமாக செய்யப்படும் என்றார்.
இங்கு மொத்தம் 224 படுக்கை வசதி ஏற்படுத்த பட்டுள்ளதாகவும், 10 சித்த மருத்துவர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வியாசர்பாடியில் அமைந்துள்ள சித்த மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு, கபசுர குடிநீர், மூலிகை தேநீர், மூலிகை ஆவிப் பிடித்தல், மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை தினமும் வழங்கப்பட உள்ளது.