இ-பாஸ் பெறாமல் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சேலம் வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து சேலம் மாநகருக்குள் வருபவர்களை சேலம் மாவட்ட எல்லையான கருப்பூர் பொறியியல் கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்ய பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து இ-பாஸ் பெறாமல் சேலம் மாநகருக்குள் வாகனத்தில் வந்த 17 பேர் மீது கொரோனா தடுப்புப் பணிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்து தனிமைபடுத்தப்பட்ட 17 நபர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சேலம் மாநகருக்குள் இ-பாஸ் பெறாமல் வருபவர்கள் தங்களின் விவரத்தினை மாநகராட்சியிடம் தெரிவிக்க மறுத்தால் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வருபவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.