11 எம்எல்ஏக்கள் வழக்கு!! ஒத்திவைப்பு....
துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கினை 15 நாட்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.


 

துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் 11 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அவர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். 

 

இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில், சபாநாயகர் முடிவெடுக்க கூறி, பிப்ரவரி மாதம் 14ந்தேதி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

 

இதனையடுத்து, 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என அதில் கூறி உள்ளார்.

 

இதை மேற்கொள்காட்டி, புகார் அளித்த 6 பேரும் பதிலளிக்க கூறி, சட்டப்பேரவை செயலர் கடந்த 10-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்நிலையில், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க மேல்முறையீடு வழக்கு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.