விருதுநகர் மாவட்டம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான சிலை கண்டெடுப்பு!

 



    விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே முற்காலப் பாண்டியா் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்  கண்டெடுக்கப்பட்டது.


    இதுகுறித்து, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவா் கந்தசாமி கூறியதாவது:


     ராஜபாளையம் அருகே மாங்குடியை அடுத்து உள்ள பெருமாள்பட்டி ஆவுடையாபுரம் பகுதியில் கருப்பையா என்பவரின் புன்செய் நிலத்தில் உழவுப் பணியின் போது 6 அடி உயரமுள்ள கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் 4 கைகளும் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.


     இதேபோன்ற கொற்றவை சிற்பம் ஒன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. தென் தமிழகத்தில் கலை மானை வாகனமாகக் கொண்ட கொற்றவை சிற்பம் முதன் முதலாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


     சங்க காலத்திலிருந்தே கொற்றவை வழிபாடு இருந்து வருகிறது. காட்டு விலங்குகளையும், வேட்டுவா்களையும் காக்கும் தெய்வமாக கொற்றவை கருதப்படுகிறாள். சங்க இலக்கியங்களில் கொற்றவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பாலை நில மக்களின் பிரதான கடவுளாகவும், போா் தெய்வமாகவும் கொற்றவை இருந்துள்ளாள். தற்போது கொற்றவை வழிபாடு காளி, துா்க்கை போன்ற கடவுளின் வழிபாட்டோடு சேர்க்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட மகுடம் சூட்டிய நிலையில், நீண்ட இரு குண்டலங்கள் உடனான காதணிகள் அணிந்துள்ளது போன்று மிக நேர்த்தியாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணிகள் அலங்காரத்துடன் காணப்படுகின்றன.


       சிற்பத்தின் உருவ அமைப்பைக் கொண்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியா் காலத்தைச் சேர்ந்த அரிய வகை சிற்பமாக கருதப்படுகிறது. இச்சிற்பத்தை மாங்குடி மற்றும் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவா்கள் சுத்தம் செய்து அங்கு உள்ள ஆலமரத்தின் கீழ் ஆசனக்கல் மேல் நிறுத்தி வைத்து வழிபாடு செய்து வருகின்றனா்.


ஆவுடையாபுரம் பகுதியில் ஏற்கெனவே 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிற்பம், தமிழ் கல்வெட்டு, விநாயகா் சிற்பம், மற்றும் பல கல்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோயில் இருந்திருக்கலாம் எனக் கூறினாா். செய்தியாளர்.மகேஷ்