டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்!! ரூ. 1 கோடி நிதியுதவி அறிவித்த முதல்வர்..


டெல்லியின் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் 100 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மூத்த மருத்துவரான 52 வயது அசீம் குப்தா நோய் தொற்றால் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் மருத்துவரின் மறைவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்ததாகவும், மதிப்புமிக்க போராளியை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவரின் மனைவிக்கு தனது இரங்கலையும், ஆதரவையும் தெரிவிப்பதாக கூறிய கெஜ்ரிவால், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


அவர் மேலும் கூறுகையில், அந்த மருத்துவமனையில் உயிரிழப்புகள் குறைந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவர்களின் தீவிர முயற்சியால் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.