20 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு கோவை பின்னலாடை நிறுவனத்தில் விற்கப்பட்ட இரண்டு சிறுமிகளை காவல்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர்


திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்த 2 சிறுமிகளை குடும்ப வறுமை காரணமாக, அவரது பாட்டி கோவை அன்னூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அந்த சம்மந்தப்பட்ட பின்னலாடை நிறுவனத்திடம் இருந்து 20 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.  


இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி விசாரித்த போது, அந்த 2 சிறுமிகளையும் இடைத்தரகர் மூலம் பணத்தை பெற்றுக்கு கொண்டு விற்கப்பட்டது தெரிய வந்தது. குடவாசல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரையடுத்து, பாட்டி விஜயலட்சுமி, இடைத்தரகர்கள் சகுந்தலா மற்றும் கனகம் ஆகியோர் மீது, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


அன்னூர் விரைந்த போலீசார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த சங்கீதா, கவிதா ஆகிய இரண்டு சிறுமிகளையும் அதிரடியாக மீட்டனர். இருவரும் விற்கப்பட்டனரா அல்லது குழந்தை தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டார்களா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.